இங்கிலாந்திடம் தோல்வி: ஹாலாண்ட் செயல் நார்வேக்கு பின்னடைவானது எப்படி?

நார்வே - இங்கிலாந்து, உலகக்கோப்பை கால்பந்து, பிஃபா, ஹாலாண்ட், பெல்லிங்ஹாம்

பட மூலாதாரம், Evrim AydinAnadolu via Getty Images

    • எழுதியவர், ஃபில் மெக்நல்டி
    • பதவி, முதன்மை கால்பந்து எழுத்தாளர்
    • இருந்து, மயாமி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மயாமியில் நடந்த போட்டியில், கூடுதல் நேரத்தில் நார்வேயை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஒரு கட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த இங்கிலாந்து அணி மீண்டு வந்து வெற்றி பெற ஜூட் பெல்லிங்ஹாமின் அபாரமான இரண்டு கோல்கள் உதவின. 1966-க்குப் பிறகு ஆடவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற இங்கிலாந்துக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது.

கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தாமஸ் டுச்செல்லின் அணி அதிர்ஷ்டத்தின் துணையுடன் வெற்றி பெற்றது. இருப்பினும், இங்கிலாந்தை அரையிறுதிக்கு அனுப்பும் வீரராக பெல்லிங்ஹாம் மீண்டும் ஒருமுறை திகழ்ந்தார். அரையிறுதியில் அர்ஜென்டினா உடன் இங்கிலாந்து அணி மோதுகிறது. இந்தப் போட்டி பிபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இறுக்கமான, பதற்றமான ஒரு மோதலில், 36-வது நிமிடத்தில் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் அடித்த ஷாட், இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டை ஏமாற்றி கோலாக மாறியதால் நார்வே முன்னிலை பெற்றது.

நார்வே - இங்கிலாந்து, உலகக்கோப்பை கால்பந்து, பிஃபா, ஹாலாண்ட், பெல்லிங்ஹாம்

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்துக்கு உடனடி பதிலடி கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. முதல் பாதியின் கூடுதல் நேரத்தில், அந்தோனி கார்டனின் பாஸை கச்சிதமாகப் பெற்று, நார்வே கோல்கீப்பர் ஓர்ஜன் நைலாண்டை ஏமாற்றி பெல்லிங்ஹாம் அந்தப் பதிலடியைக் கொடுத்தார்.

பாதி நேர இடைவேளையில், உடல்நலக்குறைவு மற்றும் காயத்தால் அவதிப்பட்டு வந்த முக்கிய வீரரான டெக்லான் ரைஸ் மற்றும் நோனி மதுயேகே ஆகியோருக்குப் பதிலாக மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் பயிற்சியாளர் துச்செலுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, எபெரெச்சி ஈஸ் மற்றும் புகாயோ சாகா ஆகியோரை அவர் களமிறக்கினார்.

இடைவேளைக்குப் பிறகு நார்வே அணி அச்சுறுத்தும் வகையில் அபாரமாக ஆடியது. எலியட் ஆண்டர்சனை நார்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலாண்ட் தேவையில்லாமல் தள்ளியதால், டார்ப்ஜார்ன் ஹெக்கெம் அடித்த கோல் நிராகரிக்கப்பட்டது.

கூடுதல் நேர இடைவேளையின்போது ஹாலாண்ட் மந்தமாக விளையாடியதால் மாற்றப்பட்டார். அதற்குள், கூடுதல் நேரம் தொடங்கி மூன்று நிமிடங்களிலேயே, மாற்று வீரரான மார்கன் ரோஜர்ஸ் அடித்த பந்தை நைலண்ட் தடுத்து வெளியேற்றிய போது, அதனை பெல்லிங்ஹாம் கோலாக்கி அசத்தினார்.

60 ஆண்டுகளுக்கு முன்பு ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை வென்ற பிறகு, இங்கிலாந்து அணி தற்போது தனது மூன்றாவது உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 1990-ல் மேற்கு ஜெர்மனியிடமும், 2018-ல் குரோஷியாவிடமும் அடைந்த தோல்விகளால் கிடைத்த ஏமாற்றத்தை இம்முறை போக்கிக் கொள்ளும் நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணி உள்ளது.

மாயாஜாலம் நிகழ்த்திய பெல்லிங்ஹாம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அஸ்டெகா மைதானத்தில் மெக்சிகோவுக்கு எதிராகப் பெற்ற அற்புதமான வெற்றியை இங்கிலாந்தால் மீண்டும் நிகழ்த்த முடியவில்லை. அங்கு அவர்கள் செலுத்திய கடும் உழைப்பாலும், மயாமியில் நிலவிய இந்த மூச்சுத்திணற வைக்கும் சூழலாலும் இங்கிலாந்து வீரர்கள் சோர்வடைந்து காணப்பட்டனர், இது புரிந்துகொள்ளக்கூடியதே.

இருப்பினும், பெல்லிங்ஹாம் இருக்கும் இடத்தில் நம்பிக்கை உண்டு என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். ரியல் மாட்ரிட் நட்சத்திரமான அவர், பெரிய போட்டிகளின் முடிவைத் தீர்மானிக்கும் தருணங்களில் முக்கிய பாத்திரம் வகித்துள்ளார்.

முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (stoppage time) அபாரமான கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்த பிறகு பெல்லிங்ஹாமின் எதிர்வினை குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் எந்தவித ஆரவாரமும் இன்றித் திரும்பி, மைய வட்டத்தை நோக்கி ஓடிச் சென்று, பின்னர் இங்கிலாந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இரண்டாவது பாதியில் நிலவிய கடும் வெப்பம் மற்றும் இரு அணி வீரர்களின் சோர்வு காரணமாக இங்கிலாந்து அணி சிரமத்தை எதிர்கொண்டது. இருப்பினும், நைலாண்ட் வழுக்கி விழுந்த தருணத்தை விரைவாகப் பயன்படுத்தி கோல் அடித்ததன் மூலம், மிக நெருக்கமான போட்டியாக அமைந்த ஆட்டத்தின் முடிவை பெல்லிங்ஹாம் தீர்மானிப்பவராக மீண்டும் ஒருமுறை இருந்தார்.

இதன் மூலம் பெல்லிங்ஹாம், இந்த உலகக் கோப்பையில் தனது மொத்த கோல்களின் எண்ணிக்கையை ஆறாக உயர்த்தியுள்ளார்.

நார்வே - இங்கிலாந்து, உலகக்கோப்பை கால்பந்து, பிஃபா, ஹாலாண்ட், பெல்லிங்ஹாம்

பட மூலாதாரம், Richard PelhamGetty Images

ஹாலாண்ட் செயலால் நார்வே ஏமாற்றம்

இந்த உலகக்கோப்பையில் ஏழு கோல் அடித்து நார்வே அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்ற ஹாலாண்ட், மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்த தொடரின் நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அவரது ஆளுமை அமெரிக்க மக்களின் மனதையும் வென்றுள்ளது.

இருப்பினும், ஒரு அற்புதமான தொடரை வெளிப்படுத்திய மான்செஸ்டர் சிட்டி முன்கள வீரரான ஹாலாண்டிற்கு, இந்த ஆட்டம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாத ஒரு போட்டியாக அமைந்தது.

முதல் பாதியில் ஜான் ஸ்டோன்ஸ் கவனக்குறைவாக இருந்த தருணத்தைப் பயன்படுத்தி கோல் அடிக்கும் வாய்ப்பை நெருங்கிய அவர், இங்கிலாந்து அணிக்கு அவ்வப்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். நார்வே 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, ​​கோல் கம்பத்தை நோக்கித் தடையின்றி ஓடிக் கொண்டிருந்த ஹாலாண்டிற்குப் பந்தை பாஸ் செய்வதற்குப் பதிலாக, அலெக்சாண்டர் சோர்லோத் தானாகவே முயற்சி செய்ய முடிவெடுத்தது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இறுதியாக, ஆண்டர்சனை அவர் தள்ளிய சம்பவத்தால், நார்வேயின் முன்னிலையை மீட்டெடுத்திருக்கக் கூடிய ஹெக்கமின் கோல் ரத்து செய்யப்பட்டது அவருக்கு மேலும் ஏமாற்றத்தை அளித்தது.

நார்வே - இங்கிலாந்து, உலகக்கோப்பை கால்பந்து, பிஃபா, ஹாலாண்ட், பெல்லிங்ஹாம்

பட மூலாதாரம், ElsaGetty Images

வீடியோ உதவி நடுவர் தலையிட்ட பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதை ஹாலாண்ட் உணர்ந்திருந்தார், அதனால் அவர் பெரிதாகக் கொண்டாடவில்லை.

ஹாலாண்டிற்கு இது ஒரு ஏமாற்றம் நிறைந்த நாளாக அமைந்தாலும், நார்வேக்கு மிகுந்த பெருமை சேர்த்த இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அவரது ஆளுமை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு