இரான் வைத்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் அணு ஆயுதம் உருவாக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images/BBC
- எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ
- பதவி, பிபிசி உலக சேவை
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அதை ஒப்படைக்க இரான் சம்மதித்ததாக டிரம்ப் கூறினார்.
இருப்பினும், திங்களன்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்சாதே இந்த கூற்றை மறுத்தார். ஏபி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ''இது ஏற்க முடியாதது'' என்று கூறினார்.
மேலதிக அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிகளை இரு தரப்பினரும் விவாதித்து வரும் நிலையில், இந்த யுரேனியம் இருப்பின் எதிர்காலம் விவாதத்திற்கான ஒரு முக்கியப் பொருளாக இருக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்றால் என்ன? அது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?
செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்றால் என்ன?
யுரேனியம் என்பது பூமியின் மேலோட்டில் இயற்கையாகக் காணப்படும் ஒரு தனிமம் ஆகும். இது பெரும்பாலும் U-238 மற்றும் U-235 ஆகிய இரண்டு ஐசோடோப்புகளால் ஆனது.
இயற்கை யுரேனியத்தில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை U-238 ஆகும். இவற்றால் அணுக்கரு தொடர்வினை தொடர்ந்து நடத்த முடியாது.
சுமார் 0.7 சதவீதம் மட்டுமே U-235 ஆகும், இது அணுக்கரு பிளவு எனப்படும் செயல்முறையின் மூலம் எளிதில் பிளவுபட்டு ஆற்றலை வெளியிடக்கூடிய ஒரு ஐசோடோப் ஆகும்.
யுரேனியத்தைப் பயனுள்ளதாக மாற்ற, செறிவூட்டல் எனப்படும் செயல்முறையின் மூலம் U-235 இன் விகிதத்தை அதிகரிக்க வேண்டும்.
முதலில், யுரேனியம் ஒரு வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வாயு பின்னர் மையவிலக்கு இயந்திரங்களுக்குள் செலுத்தப்படுகிறது. இவை மிக அதிக வேகத்தில் சுழலும் இயந்திரங்கள் ஆகும்.
அவை சுழலும் போது, கனமான U-238 சற்றே வெளிப்புறமாக நகர்கிறது, அதே நேரத்தில் லேசான U-235 மையத்திற்கு அருகிலேயே தங்கியிருக்கும்.
இது அரிதான மற்றும் பயனுள்ள வடிவமான U-235-ஐ, பொதுவான U-238-லிருந்து படிப்படியாகப் பிரித்தெடுக்க அனுமதிக்கிறது.
இந்த அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் மையவிலக்கு இயந்திரத்தின் ஒரு முனை வழியாக வெளியே எடுக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
என்ன வேறுபாடு?
பல்வேறு நிலைகளிலான செறிவூட்டல் முறை, யுரேனியத்தை பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.
குறைந்த அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம், பொதுவாக 3-5% U-235ஐ கொண்டிருக்கும். இது வணிக ரீதியான அணுமின் நிலையங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஓர் ஆயுதத்திற்குத் தேவையான அளவை விட மிகக் குறைவானதாகும்.
20% அல்லது அதற்கும் அதிகமான அளவைக் கொண்ட அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஆராய்ச்சி உலைகளில் பயன்படுத்தப்படலாம். மேலும் ஆயுதத் தரத்திலான யுரேனியம் பொதுவாக சுமார் 90% வரை செறிவூட்டப்படுகிறது.
அந்தச் செறிவில், அணுக்கரு வினையானது கிட்டத்தட்ட உடனடியாகக் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதற்கான சூழல் உருவாகிறது.
இந்த மூலப்பொருள் போதுமான அளவு ஒன்றாகச் சேர்க்கப்படும்போது, அணுக்கள் மிக வேகமாகப் பிளவுபடத் தொடங்கி, ஒரு வினாடிக்குள் மிகப்பெரிய அளவிலான ஆற்றலை வெளியிடுகின்றன.
இதுவே யுரேனியத்தின் பொது பயன்பாடு ராணுவப் பயன்பாடுகளை வேறுபடுத்துகிறது.
ஓர் அணு உலையில், எரிபொருள் மிகக் குறைந்த அளவே செறிவூட்டப்படுகிறது மற்றும் அணு வினையானது வேண்டுமென்றே மெதுவாக்கப்பட்டு கவனமாக நிர்வகிக்கப்படுகிறது.
இது மாதங்கள் அல்லது ஆண்டுகளில் படிப்படியாக ஆற்றலை வெளியிட அனுமதிக்கிறது. ஒரு குண்டில், இதன் நோக்கம் நேர்மாறானது. வினையை ஒரே நேரத்தில் மிக வேகமாக நடக்க விடுவதாகும்.
சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய ஆறு உலக நாடுகளுடன் 2015-ல் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ், இரான் யுரேனியத்தை 3.67% க்கு மேல் செறிவூட்டக் கூடாது என வரையறுக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் அதன் இருப்பை 300 கிலோவாகக் கட்டுப்படுத்தியதுடன், அது இயக்கக்கூடிய மையவிலக்கு இயந்திரங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியது மற்றும் அதன் நிலத்தடி தளத்தில் செறிவூட்டல் செய்யவும் தடை விதித்தது.
இருப்பினும், மே 2018-ல் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தின் போது அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது.

பட மூலாதாரம், Getty Images
செறிவூட்டல் நிலை ஏன் முக்கியமானது?
செறிவூட்டலின் அளவு அதிகமாக இருக்கும்போது, யுரேனியம் அணு ஆயுதங்களில் பயன்படுத்தக்கூடிய நிலைக்கு மிக நெருக்கமாகிறது.
20% செறிவூட்டலை எட்டுவது என்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும், ஏனெனில் ஆயுதத் தரத்திலான பொருளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப உழைப்பின் பெரும்பகுதி அந்த நிலைக்குள்ளேயே நிறைவடைந்துவிடுகிறது.
இயற்கை யுரேனியத்தை 20% செறிவூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கு ஆயிரக்கணக்கான முறை தொடர்ச்சியான பிரித்தெடுக்கும் நிலைகளும், அதிக அளவு நேரமும் ஆற்றலும் தேவைப்படுகின்றன.
இதனுடன் ஒப்பிடுகையில், யுரேனியத்தை 20%-லிருந்து சுமார் 90% வரை செறிவூட்டுவதற்கு மிகக் குறைவான கூடுதல் நிலைகள் தேவைப்படுகின்றன.
அதாவது, அதிக நிலைகளில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்பீட்டளவில் விரைவாக ஆயுதத் தரத்திற்கு மேலும் சுத்திகரிக்க முடியும் என்பது தான் இதன் பொருள்.
இரானிடம் எவ்வளவு யுரேனியம் உள்ளது?
தற்போதைய பேச்சுவார்த்தைகளின் மையப்புள்ளி, இரானிடம் தற்போது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதாகும்.
மூத்த அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, போர் தொடங்கியபோது இரானிடம் 60% வரை செறிவூட்டப்பட்ட சுமார் 440 கிலோ யுரேனியம் இருந்தது. இந்தப் பொருளை ஆயுதத் தரத்திலான யுரேனியத்திற்குத் தேவையான 90% வரம்பிற்கு ஒப்பீட்டளவில் விரைவாக செறிவூட்ட முடியும்.
இரானிடம் சுமார் 20% செறிவூட்டப்பட்ட 1,000 கிலோ யுரேனியமும், சுமார் 3.6% செறிவூட்டப்பட்ட 8,500 கிலோ யுரேனியமும் உள்ளது. இவை பொதுவாக ஆற்றல் உற்பத்தி அல்லது மருத்துவ ஆராய்ச்சிக்காக அதாவது பொது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
அணு ஆயுதங்களுக்கான மூலப்பொருளாக மாற்றப்படக்கூடிய அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பெரும்பகுதி இஸ்பஹானில் சேமிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்ட இரானின் மூன்று நிலத்தடி அணுசக்தி தளங்களில் இதுவும் ஒன்றாகும்.

பட மூலாதாரம், Google maps/BBC
இருப்பினும், மற்ற இடங்களில் எவ்வளவு அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் சேமிக்கப்பட்டுள்ளது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
அணுசக்தி செறிவூட்டலை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இரான் நிராகரித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்குப் பதிலாக, மோதல்கள் வெடிப்பதற்கு முன்பு முன்வைத்த ஐந்தாண்டு கால இடைநிறுத்தத்தையே அது முன்மொழிந்துள்ளது.
மேலும், முன்பே கூறியபடி 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் வலிமையை குறைக்க இரான் தயாராக இருக்கும் அதே வேளையில், 440 கிலோ எடையுள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அது நிராகரித்துள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் குரோசி கடந்த ஆண்டு அக்டோபரில் ஏபி செய்தி நிறுவனத்திடம், இந்த அளவு யுரேனியம் மேலும் செறிவூட்டப்பட்டால் 10 அணு குண்டுகளைத் தயாரிக்க போதுமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இரான் அணு ஆயுதத்தை உருவாக்குகிறதா?
தனது அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அமைதி பயன்பாட்டிற்கானவை என்று இரான் வலியுறுத்துகிறது.
மேலும் இரானிடம் செயலில் உள்ள அணு ஆயுதத் திட்டம் இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் தாம் காணவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறுகிறது.
ஆயுதத் தரத்திலான யுரேனியத்தை உருவாக்குவது செய்வது என்பது அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான ஒரு படி மட்டுமே. ஒரு செயல்படக்கூடிய குண்டுக்கு, ஒரு போர்முனையை வடிவமைத்து ஒன்றிணைப்பது மற்றும் அதனைச் செலுத்தும் முறையை உருவாக்குதல் உள்ளிட்ட சிக்கலான கூடுதல் பணிகள் தேவைப்படுகின்றன.
"இரான் 2003-ஆம் ஆண்டு வரை போர்முனை வடிவமைப்பில் சில திறன்களை உருவாக்கியிருந்தது. அதன் பிறகு அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது" என்று ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர் பாட்ரிசியா லூயிஸ் கூறுகிறார்.
இருப்பினும், "2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் முறிவு மற்றும் புதிய ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தோல்விகளுக்குப் பிறகு, இரான் மீண்டும் போர்முனைத் திறனை உருவாக்கத் தீர்மானித்திருக்க வாய்ப்புள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரான் ஒரே ஒரு சாதனத்திற்குத் தேவையான ஆயுதத் தரத்திலான யுரேனியத்தை "ஒருவேளை ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில்" உற்பத்தி செய்ய முடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் மே 2025 மதிப்பீடு கூறியது.
இருப்பினும், இரான் "நிச்சயமாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை" என்றும் அது கூறியது. அதே நேரத்தில் இரான் விரும்பினால் அவ்வாறு செய்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டது.
இரான் அணு ஆயுதத்திற்கான கூறுகளை உருவாக்குவதில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" அடைந்துள்ளதை உணர்த்தும் உளவுத் தகவல்கள் தங்களிடம் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
கூடுதல் தகவல்கள் : நாடியா சுலைமான்
தொகுப்பு : மார்க் ஷியா
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































