நவோதயா பள்ளிகள் என்றால் என்ன? தமிழ்நாடு அரசு எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், யாழினியன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளுக்கான நிலத்தை தமிழ்நாடு அரசு அடையாளம் காண வேண்டுமெனக் கூறிய உச்ச நீதிமன்றம், அதற்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
அதேநேரம், பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்பிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், மாநில அரசும் ஒன்றிய அரசும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால், நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதே நேரம், தமிழகத்தில் இந்தப் பள்ளிகளைத் தொடங்க வேண்டுமென்ற கருத்தையும் பாஜக மற்றும் ஒரு தரப்பு கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் "தமிழகத்தின் இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செப்டம்பர் 18ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நவோதயா பள்ளிகள் எப்படி உருவாயின?
கடந்த 1985-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, நாடு முழுவதும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளியைத் தொடங்கும் திட்டத்தை முன்வைத்தார்.
இந்தத் திட்டம், 1986-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றது. ஹரியாணாவின் ஜஜ்ஜரிலும் மகாராஷ்ட்ராவின் அமராவதியிலும் முதல் இரண்டு நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.
ஜவஹர் நவோதயா வித்யாலயா என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளிகள் உறைவிடப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் இதில் படிக்க முடியும்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது தமிழ்நாடும் மேற்கு வங்கமும் மட்டும் இதை ஏற்கவில்லை. நவோதயா பள்ளிகளில் பொதுவாக மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. எட்டாம் வகுப்புக்குப் பிறகு ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நவோதயா பள்ளிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டுமென்ற 2017-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. 2025 டிசம்பர் 15-ஆம் தேதி, ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை அமைக்கத் தேவையான நிலத்தை அடையாளம் காணுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரியது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோருவதாக மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா தெரிவித்தார்.
ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவைத் திரும்பப் பெற மறுத்தது. அதற்குப் பதிலாக, நிலத்தை அடையாளம் காண தமிழ்நாடு அரசுக்கு மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கியது. இது உடனடியாக நிலத்தைக் கையகப்படுத்த வேண்டுமென்ற உத்தரவு அல்ல, இதற்குப் பொருத்தமான நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்பதே உத்தரவு என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
நவோதயா பள்ளிகளை அமைப்பது தமிழ்நாட்டின் தற்போதைய கல்விக் கொள்கையைப் பாதிக்கும் என்றும், இந்தப் பள்ளிகளுடன் தொடர்புடைய மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்கவில்லை என்றும் மாநில அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதோடு, கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால் ஒன்றிய அரசின் கொள்கையை ஒரு மாநிலம் ஏற்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்த முடியாது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், கூடுதலாக ஒரு பள்ளி செயல்படுவதால் தமிழ்நாட்டின் தற்போதைய கல்வித் தரம் குறையாது என்று நீதிபதி பி.வி. நாகரத்னா தெரிவித்தார். தமிழ்நாட்டின் கல்வித் தரம் உயர்ந்திருப்பதை நீதிமன்றமும் அறிந்திருப்பதாகக் கூறிய அவர், நவோதயா பள்ளிகள் கூடுதல் கல்வி வாய்ப்பை வழங்கும் என்று தெரிவித்தார்.
கூடுதலாக, மாநில அரசும் ஒன்றிய அரசும் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. ஒத்துழைப்புக் கூட்டாட்சியின் அடிப்படையில் இரு தரப்பும் செயல்பட வேண்டுமென நீதிபதிகள் வலியுறுத்தினர்.
நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான கொள்கை மற்றும் பிற விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு டிசம்பர் 14-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பட மூலாதாரம், Udhayanidhi Stalin/Facebook
'இருமொழிக் கொள்கையை நிலைநாட்ட வேண்டும்' – உதயநிதி ஸ்டாலின்
இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது என்று திமுக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் திமுக எதிரானது அல்ல என்றும், அதேவேளையில் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது தமிழ்நாடு இந்தியாவில் இருந்து தனித்துச் செயல்படுவதாகப் பொருளல்ல என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தொடர்ந்து இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி வருவதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின், ஹிந்தி தெரியாத காரணத்தால் தமிழ்நாடு கல்வி அல்லது வளர்ச்சியில் பின்தங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலம் பின்தங்கிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டு வருவதால், நவோதயா பள்ளிகளுக்கென தனியாக நிலம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்பதே திமுகவின் வாதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவோதயா பள்ளிகளுக்குச் செலவிடப்படும் நிதியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கினால், ஏற்கெனவே உள்ள கட்டமைப்பைக் கொண்டு மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி தொடர்பாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தமிழ்நாடு அரசும் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் அரசு தொடர்ந்து உறுதியான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்டி நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், Nainar Nagenthran/Facebook
'நவோதயா பள்ளிகள் தேவை'
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களை அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படும் இந்தப் பள்ளிகள், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உறைவிட வசதியுடன் இலவசக் கல்வி வழங்கும்" என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், "உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள மூன்று மாத அவகாசத்திற்குள் தேவையான நிலங்களை அடையாளம் கண்டு ஒதுக்குவதுடன், புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் கல்வியாளர் கே.ஆர். நந்தகுமார்.
மாணவர்கள் மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்று பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட அவர், "தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசதியான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஹிந்தி கற்கும் வாய்ப்பைப் பெறும் நிலையில், நவோதயா பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பை வழங்கும்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
'தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'
இதற்கு மாறாக, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, நவோதயா பள்ளிகளை அனுமதிப்பதில் தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், நவோதயா விவகாரம் வெறும் மொழிப் பிரச்னை மட்டுமல்ல என்றும், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளைவிட நவோதயா பள்ளிகள் உயர்ந்தவை என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தான் கருதுவதாகவும் கூறினார்.
"கல்வி என்பது உரிமை. அனைவருக்கும் சமமான மற்றும் சிறந்த கல்வியை வழங்குவதுதான் அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பள்ளி முறையை மட்டுமே முன்னிலைப்படுத்தக் கூடாது," என்று அவர் தெரிவித்தார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டிய நிலையில், நவோதயா பள்ளிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பை வழங்குவதாகவும் அவர் விமர்சித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 19வது பிரிவுகள் வழங்கும் அடிப்படை உரிமைகளுடன் நவோதயா பள்ளிகளின் நடைமுறை முரண்படுவதாகத் தான் கருதுவதாகக் கூறிய பிரின்ஸ் கஜேந்திர பாபு, தமிழ்நாடு அரசு இந்தப் பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
'நவோதயாவில் நான் சிரமப்பட்டேன்'
இதற்கிடையே, காரைக்காலில் உள்ள அரசு ஊழியரும், 1986-ஆம் ஆண்டு நவோதயா பள்ளியில் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களில் ஒருவருமான சார்லஸ், அந்தப் பள்ளியில் பயின்றது குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், தான் தமிழ்வழிக் கல்வியில் இருந்து நவோதயா பள்ளியில் சேர்ந்தபோது ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதே சிரமமாக இருந்ததாகவும், அதனுடன் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது கூடுதல் சுமையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
"தமிழ் வழியில் படித்து வந்த எங்களுக்கு தமிழ் பிரச்னையாக இருக்கவில்லை. ஆனால், ஆங்கிலமும் ஹிந்தியும் புதிதாக இருந்ததால் அவற்றைக் கற்றுக் கொள்வதற்கு கடுமையாகப் போராடினோம்," என்று அவர் கூறினார்.
தற்போது தனது மகள் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வருவதாகவும், அங்கு தமிழ் ஆசிரியர்கள் இல்லாததால் தனது மகள் தமிழைக் கற்றுக் கொள்வதில் சிரமப்படுவதாகவும் சார்லஸ் தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கை மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறுவதுடன், நாளடைவில் தாய்மொழி மீதான ஆர்வத்தையும் குறைக்கக் கூடும் என்பது தனது அனுபவம் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுமா, அவற்றுடன் தொடர்புடைய மொழிக் கொள்கை தொடர்பான மாநிலத்தின் எதிர்ப்பு தொடருமா என்பதற்கு, அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளும் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள உச்ச நீதிமன்ற விசாரணையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பட மூலாதாரம், X/Rajmohan
'இருமொழிக் கொள்கையில் மாற்றமில்லை' – தமிழக அரசு
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செப்டம்பர் 18ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவித்தார்.
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாங்கள் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறோம், தொடர்ந்து அதையே பின்பற்றுவோம். எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது," என்று அவர் கூறினார்.
மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றும் நவோதயா பள்ளிகளை அமைக்கத் தேவையான நிலத்தை தமிழக அரசு வழங்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நீண்ட வரலாறு
தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உள்ளது. பள்ளிகளில் கட்டாயமாக ஹிந்தி கற்பிக்கும் முயற்சிக்கு எதிராக 1937ஆம் ஆண்டிலேயே முதல் போராட்டம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களின் காரணமாக கட்டாய ஹிந்தி கல்வி பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோதும், ஹிந்தி நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக மாறுவது தொடர்பாக ஹிந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தது. 1965ஆம் ஆண்டு முதல் ஹிந்தி மட்டுமே அதிகாரபூர்வ மொழியாகிவிடும் என்ற அச்சம் தமிழ்நாட்டில் மீண்டும் பெரிய போராட்டமாக உருவெடுத்தது.

பட மூலாதாரம், DMK
கடந்த 1965ஆம் ஆண்டு தொடங்கிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களின் பங்கேற்பும் அதிகரித்த நிலையில், போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. வன்முறை, காவல்துறை நடவடிக்கை உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்தப் போராட்டங்களின் பின்னணியில், ஆங்கிலமும் தொடர்ந்து அதிகாரபூர்வ மொழியாகப் பயன்படுத்தப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்ததிலும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கியப் பங்கு வகித்ததாகப் பார்க்கப்படுகிறது.
பின்னர் அதிகாரபூர்வ மொழிகள் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் மூலம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தைத் தொடர்ந்து அதிகாரபூர்வ மொழிகளாகப் பயன்படுத்தும் நடைமுறை உறுதி செய்யப்பட்டது.
அதன் பிறகும், ஹிந்தி திணிப்பு தொடர்பான விவகாரங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது எதிர்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































