கொல்கத்தாவின் வெற்றிப் பயணத்தைத் தடுக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு?

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 தொடரின் 57வது போட்டியில் இன்று (மே 13) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த சீசன் ஆர்சிபி அணியின் இரண்டாவது ஹோம் கிரவுண்டாக விளங்கிவரும் ராய்ப்பூரில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்த சீசனில் இவ்விரு அணிகளும் இப்போதுதான் முதல் முறை மோதுகின்றன.
ராய்ப்பூரில் மழை பெய்ததால், மைதானம் தயாராவதற்குக் தாமதமானது. அதனால், இரவு 7.30 மணிக்குத் தொடங்கவேண்டிய போட்டி 8.45 மணிக்குத் தொடங்குகிறது. தாமதமாகத் தொடங்கினாலும் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ரொமாரியோ ஷெபர்ட் நீக்கப்பட்டு வெங்கடேஷ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார். நைட் ரைடர்ஸ் அணியில், காயமடைந்த தமிழ்நாடு ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாக சௌரப் துபே சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்டார்.
ஏன் இந்த வெற்றி முக்கியம்?
ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இந்த இரு அணிகளுக்குமே முக்கியம்.
ஆர்சிபி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்றிருக்கிறது. 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது அந்த அணி. 10 போட்டிகளில் விளையாடியிருக்கும் கேகேஆர் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. 9 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது அந்த அணி.
முதல் 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற்றிடாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன்பிறகு எழுச்சி பெற்று தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. வருண் சக்கரவர்த்தி மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப, புகழ்பெற்ற கேகேஆர் ஸ்பின் யூனிட் எதிரணிகளுக்குக் கடும் சவால் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி இந்தப் போட்டியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமையலாம்.
பிளேயிங் லெவனில் யார்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இந்தப் போட்டிக்கான ஆர்சிபி அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ரொமாரியோ ஷெபர்ட், சுயாஷ் ஷர்மா ஆகியோருக்குப் பதிலாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.
பிளேயிங் லெவன்: ஜேக்கப் பெதெல், விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), குருனால் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார், ஜாஷ் ஹேசில்வுட், ராஷிக் தார், ஜேக்கப் டஃபி.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: மங்கேஷ் யாதவ், ஜோர்டன் காக்ஸ், ரொமாரியோ ஷெபர்ட், தேவ்தத் படிக்கல், ஸ்வப்னில் சிங்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இந்தப் போட்டிக்கான கேகேஆர் அணியில் 1 மாற்றம் செய்யப்பட்டது. காயமடைந்த தமிழ்நாடு ஸ்பின்னர் வருண் சக்கர்வர்த்தி இந்தப் போட்டியில் ஆடவில்லை. சௌரப் துபே விளையாடுவார் என்று டாஸின்போது கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்தார்.
பிளேயிங் லெவன்: ஃபின் ஆலன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ரிங்கு சிங், ராவ்மன் பவெல், அனுகூல் ராய், மனிஷ் பாண்டே, சுனில் நரைன், கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: டிம் செய்ஃபர்ட், நவ்தீப் சைனி, ரமன்தீப் சிங், தேஜஸ்வி சிங், சௌரப் துபே.





























