டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்காத விராட் கோலி - பாகிஸ்தானிலும் எழும் விவாதம்

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பிபிசி உருது மொழி சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஹைதராபாத் மற்றும் பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் உடன் விராட் கோலி கைகுலுக்காமல் சென்றது விவாதப் பொருளாகியுள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் மற்றும் சமூக ஊடகப் பயனர்கள் இந்த நிகழ்வை விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி வெள்ளிக்கிழமை (மே 22) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
போட்டியின்போது கூட டிராவிஸ் ஹெட் மற்றும் விராட் கோலி இடையே நிறைய சைகைகள் பரிமாறப்பட்டிருந்தாலும் போட்டி முடிந்த பிறகு கைகுலுக்குவதற்கு டிராவிஸ் ஹெட் முன்வந்தபோது விராட் கோலி அதை புறந்தள்ளிவிட்டு கடந்து சென்றார்.
கம்மின்ஸ் மற்றும் அபிஷேக் சர்மா உடன் கைகுலுக்கிய கோலி ஹெட் உடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 256 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது. அந்த இலக்கை துரத்தி ஆடிய பெங்களுரு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. 11 பந்துகளைச் சந்தித்த கோலி 15 ரன்கள் எடுத்திருந்தார்.
இரு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன.
களத்தில் கைகுலுக்கிக் கொள்வது தொடர்பாக சர்ச்சை எழுவது இது முதல்முறை அல்ல.
முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய அணி மறுத்துவிட்டது. இது இரு அணிகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.
கோலி கோபத்துடன் இருந்தாரா?

பட மூலாதாரம், Social Media
கோலி கைகுலுக்காத சம்பவம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், "மக்கள் ஏன் கோலியை இவ்வளவு விமர்சிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. களத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் எவ்வளவு ஸ்லெட்ஜிங் செய்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த சுற்றுப்பயணங்களில் நடந்த அனைத்தையும் என்னால் கூற முடியாது. அவர்கள் களத்தில் மட்டுமல்ல மனதளவிலும் உங்களுக்கு எதிராக விளையாடுவார்கள்." என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் சமூக ஊடகப் பயனரான இன்ஸமாம் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவிடுகையில், "போட்டியின்போது அவர்களுக்குள் ஏதாவது நடந்திருக்க வேண்டும். ஆனால் அது களத்துக்குள் மட்டுமே இருக்க வேண்டும். விளையாட்டு உணர்வு மிகவும் முக்கியமானது, போட்டிக்குப் பிறகு மரியாதை தான் முதலில் வர வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பயனர் கோலியை விமர்சித்து வெளியிட்டிருந்த பதிவில், "இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்த பிறகும் இந்த நபர் பாகிஸ்தான் வீரர்களின் அறைக்குச் சென்று அவர்களுடன் நகைச்சுவையாக பேச முடியும். ஆனால் டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க முடியாது" என்று கூறியிருந்தார்.
2023-இல் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போது இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட்டது. அப்போது பாகிஸ்தான் வீரர்களின் அறைக்குச் சென்று அவர்களிடம் பேசினார் கோலி.
இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி இது தொடர்பாக கூறுகையில், "19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடிய காலத்தில் இருந்து எனக்கு கோலியைத் தெரியும். களத்தில் தன்னுடைய கட்டுப்பாடுகள் என்னவென்பது அவருக்குத் தெரியும். களத்தில் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது, அதை கோலி மிகவும் மோசமானதாகக் கருதியிருக்கிறார் என்பதையே அவரது நடத்தை உணர்த்துகிறது." என்றார்.
இந்தியா பற்றி இதற்கு முன்பாகவும் டிராவிஸ் ஹெட் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
விராட் கோலி வேகமாக விளையாட வேண்டும் பெரிய ஷாட்களை அடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் தூண்டியதாகவும் பொருத்தமற்ற சைகைகளைச் செய்ததாகவும் அபிஷேக் குமார் என்கிற சமூக ஊடகப் பயனர் கூறுகிறார்.
விராட் கோலி ஆட்டமிழந்தபோது அவர் முன் வந்த டிராவிஸ் ஹெட் விசித்திரமான முறையில் கொண்டாடியதாகவும் கோலி அதை அவமானகரமாகப் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய அணியை கலங்கடித்த டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் சதமடித்த டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கியமான பங்கு வகித்தார்.
241 ரன்கள் என்கிற இலக்கை துரத்தி விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் மறுபக்கம் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார்.
அதற்கு முன்னர் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா கொடுத்த கடினமாக கேட்சையும் பிடித்தார். இந்தியாவின் தோல்வியால் ஏமாற்றமடைந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக ஊடகத்தில் தங்களில் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
பாகிஸ்தான் அணியுடன் ஏற்பட்ட சர்ச்சை
கைகுலுக்குவது தொடர்பாக சர்ச்சை எழுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா உடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்.
இந்தியாவின் வெற்றிக்குப் பிறகும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் இந்திய அணி வீரர்கள் பெவிலியன் திரும்பினர்.
போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் களத்துக்கு வரவில்லை. போட்டியின்போது சூர்யகுமார் யாதவ் உடை மாற்றும் அறை கதவை மூடியதையும் காண முடிந்தது.
இது "விளையாட்டு உணர்வுக்கு" எதிராக உள்ளது எனக் குறிப்பிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டும் எனவும் கோரியது. இது நடக்கவில்லை என்றால் ஆசிய கோப்பை தொடரை புறக்கணிப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்திருந்தது.
இந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியிலும் இரு அணிகளும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























