மதுரையில் டைடல் பார்க் பணிகள் எப்போது தொடங்கும்? புதிதாக வர தயாராகும் 9 நிறுவனங்கள் எவை?

மென் பொருள் வேலை வாய்ப்பு
படக்குறிப்பு, எல்காட் மூலம் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை பெற்றுள்ளனர்.
    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே போன்ற பெரு நகரங்களின் வளர்ச்சியில் சாப்ட்வேர் எனப்படும் மென்பொருள் துறையின் வளர்ச்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை மட்டுமே மென்பொருள் நிறுவனங்களின் தலைமை இடமாக இருந்து வருகிறது. கோவையிலும் மென்பொருள் நிறுவனங்கள் சில செயல்படுகின்றன.

மதுரையில் ஹெச்.சி.எல்(HCL), ஹனிவெல் (Honey well), டி.வி.எஸ்(TVS) போன்ற சில மென்பொருள் நிறுவனங்கள் இருக்கின்றன. இதைத் தவிர மற்ற மாவட்டங்களில் மென்பொருள் துறை சார்ந்த நிறுவனங்கள் பெரிய அளவில் இல்லை.

இதன் காரணமாக தமிழக இளைஞர்கள் மென்பொருள் பணிகளுக்காக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு சொந்த ஊரை விட்டு இடம் பெயர வேண்டியச் சூழ்நிலை காணப்படுகிறது.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மென்பொருள் நிறுவனங்கள் கால் பதிக்க ஏதுவான சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினார். முதல் கட்டமாக ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில், ஐந்து ஏக்கரில் இது அமைக்கப்படும்", என்றார்.

மேலும் "இரண்டாம் கட்டத்தில், மேலும் ஐந்து ஏக்கரில் இரட்டிப்பாக்கப்படும். இந்தப் பூங்காவானது, தகவல் தொழில்நுட்பம் FINTECH மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.

மென் பொருள் வேலை வாய்ப்பு
படக்குறிப்பு, மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தம் அருகில் 10 ஏக்கர் நிலப் பரப்பரளவில் இரண்டு கட்டமாக டைடல் பார்க் அமைய உள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்தார்.

ஆனால், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 10 ஏக்கர் இடத்தில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து இருந்தனர். ஆனால், அந்த வழக்கில் டைடல் பார்கிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

டைடல் பார்க் பணிகள் எப்போது துவங்கும் என்று கேட்ட போது பிபிசியிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தம் அருகில் 10 ஏக்கர் நிலப் பரப்பரளவில் இரண்டு கட்டமாக டைடல் பார்க் அமைய உள்ளது. இதன் முதல் கட்டமாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடுச் செய்யப்பட்டது. அந்த நிலத்தைக் கையப்படுத்திவதில் சில சட்ட சிக்கல்கள் நீதிமன்றத்தில் இருந்தன. தற்போது அவை அனைத்தும் தீர்க்கப்பட்டு உள்ளன.

எல்காட் அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் டைடல் பார்க் அமைய இருக்கும் மாட்டுத்தாவணி இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இது தொடர்பான அறிக்கை DMA-க்கு (Department of Municipal Administration) அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. மதுரையில் அமைய உள்ள டைடல் பார்க்கில் 51% மதுரை மாநகராட்சியின் பங்களிப்பும் 49% தனியாரின் பங்களிப்பும் இருக்கும்," என்றார்.

மேலும், "அதன்படி அரசிடம் இருந்து சிறப்புச் செயல்திட்டம் ( SPV- Special Purpose vision) தயார் செய்யப்பட்டு நிலத்தை பிளாட்களாக பிரிப்பது போன்றப் பணிகள் நடைபெற வேண்டும். அதற்கு, தமிழ்நாடு அரசு எல்காட் அதிகாரிகள் வழங்கிய அறிக்கையை ஏற்று விரைவில் அரசாணை வெளியாகும் என நம்புவதாகவும் அதன்பின் டைடல் பார்க் பணிகள் வேகமெடுக்கும்", என்றும் தெரிவித்தார்.

மென் பொருள் வேலை வாய்ப்பு
படக்குறிப்பு, மதுரையை நோக்கி மென்பொருள் நிறுவனங்கள் வரத்துவங்கி உள்ளன என்கிறார் இந்தியத் தொழில் கூட்டமைப்பு பணிக்குழு முன்னாள் தலைவர் ஆஸ்வின் தேசாய்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மதுரையை நோக்கி மென்பொருள் நிறுவனங்கள் வரத் துவங்கி உள்ளன என்கிறார் இந்தியத் தொழில் கூட்டமைப்பு பணிக்குழு முன்னாள் தலைவர் ஆஸ்வின் தேசாய். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மதுரை இலந்தைகுளம், வட பழஞ்சி ஆகிய பகுதிகளில் மென்பொருள் நிறுவனங்களுக்காக எல்காட் வளாகம் அமைக்க பல ஏக்கர் நிலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது.

ஆனால், பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் மதுரை எல்காட்டில் தங்களின் கிளையினைத் துவங்க முன்வரவில்லை. தற்போது அந்த நிலைமை மாறி உள்ளது. மதுரையை நோக்கி மென் பொருள் நிறுவனங்கள் வரத் துவங்கி உள்ளன. மதுரையில் துவங்கப்பட்ட ஹெச்.சி.எல். (HCL) நிறுவனத்தில் தற்போது 7 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

அதேபோல், ஹனிவெல் மென்பொருள் நிறுவனத்தில் (Honeywell) 600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இலந்தைகுளம், வடபழஞ்சி பகுதிகளில் உள்ள எல்காட் வளாகத்துக்கு மென்பொருள் நிறுவனங்கள் வரத் துவங்கி உள்ளதால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அதேபோல் டைடல் பார்க் அமைக்கும் பணியில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து விட்டன இரண்டு ஆண்டுகளில் அமைய வாய்ப்புகள் இருக்கின்றன.

இனி வரும்காலங்களில் மதுரையில் அதிக மென்பொருள் நிறுவனங்கள் துவங்கப்படுவதால் இனி ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்ய சென்னை செல்ல வேண்டிய தேவை இருக்காது," என்கிறார்.

மதுரை எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா
படக்குறிப்பு, தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை அளிக்கும் வகையில் மதுரையில் மென்பொருள் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கவுள்ளன.

11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த எல்காட்

மதுரை எல்காட் தொடர்பான தகவலை பிபிசி தமிழிடம் எல்காட்டின் அதிகாரி கூறும் போது, "மதுரையில் வட பழஞ்சி, இலந்தைகுளத்தில் 2010 ஆம் ஆண்டு எல்காட் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு 273 ஏக்கர் பரப்பளவு ஒதுக்கீடு செய்தது. இதில் இலந்தைகுளத்தில் 28 ஏக்கர், வட பழஞ்சியில் 245 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக," கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எல்காட்டிற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் முதல் நான்கு வருடத்தில் எந்த மென்பொருள் நிறுவனமும் தங்களின் நிறுவனத்தை மதுரையில் துவங்க முன்வரவில்லை.

2015 ஆம் ஆண்டு ஹனிவெல் மற்றும் ஹெச்.சி.ஏல் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே மதுரையில் உள்ள எல்காட்டில் மென்பொருள் நிறுவனத்தை துவங்க முன் வந்தன. இந்த இரண்டு நிறுவனத்தில் மட்டும் 7500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இது தவிர மற்ற மென்பொருள் நிறுவனங்ளைச் சேர்த்தால் 11,500க்கும் மேற்பட்டோர் எல்காட் மூலம் வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. தற்போது, அதிகப்படியான மென்பொருள் நிறுவனங்கள் மதுரையை நோக்கி திரும்பி இருக்கின்றனர்".

மேலும் கூறிய அவர் "மதுரை வட பழஞ்சி எல்காட்டில் புதிதாக 9 நிறுவனங்கள், தங்களது மென்பொருள் நிறுவனத்தை துவங்க ஒப்பந்தம் செய்து உள்ளன. அந்த நிறுவனங்களின் பணி நிறைவடைந்தால் மேலும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்", எனக் கூறினார்.

மென் பொருள் வேலை வாய்ப்பு
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் புதிதாக 10 தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்கிறார் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.

தமிழ்நாட்டில் புதிதாக 10 தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்கிறார் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் 6 வது "கனெக்ட் மதுரை 2023 தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, "சென்னை, ஒசூர், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் 10 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளார்," எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், "கங்கை கொண்டான், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொய்வின்றி செயல்படுத்தப்படும், துறை ரீதியாக அமைச்சர்கள் மாறினாலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்," என்றார்.

மேலும் கூறிய அவர் "மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்ட எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது, இதனையடுத்து அத்திட்டத்தை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)