கோவையில் ஒரே இமெயிலில் 3,000 பேரை வேலையை விட்டு நீக்கிய அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?

கோவை: ஒரே மெயிலில் 3,000 பேர் வேலையைப் பறித்த அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?
    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மூலமாக பாடம் நடத்தி வந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை, ஒரேயொரு மெயிலில் 'இனிமேல் வேலை இல்லை' என்று தகவல் அனுப்பி வீட்டிற்கு அனுப்பியுள்ளது ஒரு அமெரிக்க நிறுவனம்.

இதனால் திடீரென வேலை வாய்ப்பை இழந்துள்ள பல ஆயிரம் பேர், தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர் நலத்துறையின் முயற்சியால், இவர்களுக்கு இறுதி மாத ஊதியம் மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ள நிலையில், பணிக்கொடை முழுதாகக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட 'ஃபோகஸ் எஜூமேட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற இணைய கல்வி நிறுவனம், இந்தியாவில் பல ஆயிரம் ஊழியர்களைக் கொண்டிருந்தது.

இவர்கள் அனைவருக்கும் கடந்த ஜனவரி 24ஆம் தேதியன்று இரவு வந்த இமெயிலில், அந்த நிறுவனம் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், கோவையில் தான் பணியாற்றி வந்தனர். இவர்கள் அனைவரும் இப்போது வேலையை இழந்து நிற்கின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

என்ன நடந்தது?

தங்களுக்கு நடந்தது குறித்து பிபிசி தமிழிடம், இந்த நிறுவனத்தில் பணியாற்றிய பலரும் விளக்கினர். அவர்கள் கூறிய தகவலின்படி, அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் வகுப்புகள் நடக்கும் நேரத்தில், சில பாடங்களை விளக்கிச் சொல்வதுதான் இந்த அமெரிக்க நிறுவனத்தின் பணியாக இருந்துள்ளது.

இவ்வாறு இணைய வழியில் பாடம் எடுப்பவர்களை FEV Tutor என்கிறார்கள். இந்தியாவில் இந்த நிறுவனத்தின்கீழ், 3115 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களில் 1800க்கும் அதிகமானவர்கள், கோவை நகரில்தான் பணியாற்றியுள்ளனர்.

இவர்களுக்காக ஆர்.எஸ்.புரம், திருச்சி ரோடு சுங்கம் உள்ளிட்ட 3 இடங்களில் சில அலுவலகங்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 800–900 பேர் மட்டுமே, அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றிய நிலையில், மற்றவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றி வந்துள்ளனர்.

கோவை: ஒரே மெயிலில் 3,000 பேர் வேலையைப் பறித்த அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?

ஊதியமாக குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளனர். கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் திறன் வாய்ந்த, ஆங்கிலப் புலமை கொண்ட பட்டதாரிகளே இதற்குத் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திடீரென வேலை பறிபோனது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இந்த நிறுவனத்தின் ஊழியரான யோகேஷ் குமார், ''இந்தியாவிலேயே கோவையில் தான் இந்த நிறுவனத்தில் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். சென்னை, பெங்களூரு அலுவலகங்களை மூடிவிட்டு, வீட்டிலிருந்து பணி செய்யச் சொல்லிவிட்டனர்.

நாங்கள் 'ஷேர் ப்ராசஸ்' என்ற மென்பொருள் வழியாகத்தான் கற்பித்தல் பணியை மேற்கொண்டோம். அமெரிக்காவிலுள்ள மாணவர்கள், தங்கள் சந்தேகங்களைக் குரல் வழியில் கேட்பார்கள், நாங்கள் அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக விளக்குவோம்," என்று கூறினார்.

இதுதவிர, "ஒயிட் போர்டு' என்பதில் இணைய வாயிலாக கணக்கு பயிற்றுவிப்போம். அவர்களுக்கு கணிதம் மற்றும் இதர பாடங்களில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதுதான் எங்களுடைய வேலை. அந்த வேலைக்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டது'' என்றார்.

கடந்த 23ஆம் தேதியன்று இரவுப் பணியை இவர்கள் முடிக்கும்போது, ஜனவரி 24 அன்று அலுவலகப் பராமரிப்புப் பணி இருப்பதால், வீட்டிலிருந்து பணி செய்யுமாறு தகவல் கூறப்பட்டுள்ளது. மறுநாள் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியிடம் இருந்து வந்த மெயிலில் நிறுவனம் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்துப் பேசிய யோகேஷ் குமார், ''நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு யாரும் தயாராக இல்லை; கடந்த 6 மாதங்களாக தங்களின் பணித் திறனை ஆய்வு செய்ததில், தங்களின் பணியில் திருப்தியில்லை என்ற இரண்டு தகவல்கள் மட்டுமே, அந்த மெயிலில் இருந்தது.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான தகவல்கள்தான் இடம் பெற்றிருந்தன. இந்த மெயில் வந்த சிறிது நேரத்தில் நாங்கள் தொடர்பில் இருந்த, பணி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து மெயில்களும் முடக்கப்பட்டன. பாஸ்வேர்டு கொடுத்தாலும் அவற்றை அணுக முடியவில்லை'' என்றார்.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிலாளர் நலத்துறை

கோவையில் ஒரே இமெயிலில் 3,000 பேரை வேலையை விட்டு நீக்கிய அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?

கடந்த ஜனவரி 24 வெள்ளியன்று இந்த மெயில் வந்துள்ளது. வழக்கமாக சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், அனைத்து ஊழியர்களும், ஜனவரி 27 திங்கள் கிழமையன்று அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர்.

ஆனால் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் அனைத்து ஊழியர்களும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து, கோவை பாலசுந்தரம் சாலையிலுள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் திரண்டனர். இவர்களுக்கு ஆதரவாக சிஐடியு, இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் அங்கு குவிந்தனர்.

அதன்பின், தொழிலாளர் நலத்துறை சார்பில், 'ஃபோகஸ் எஜூமேட்டிக்ஸ்' நிறுவனத்தின் கோவை நிர்வாகிகள் சிலரைத் தொடர்பு கொண்டுள்ளனர். நிறுவனத்தின் சார்பில் நிரஞ்சன் குமார் என்பவர் வந்துள்ளார். அவருடைய உதவியுடன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியிடம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராஜ்குமார் பேசியுள்ளார்.

அதில் சில உடன்பாடுகள் ஏற்பட்டன. அதன்படி ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று, பணிக்கொடை, பிஎஃப் தொகையைப் பெறுவதற்கான அனுமதி, கல்விச்சான்று, லேப் டாப்புக்காக ஊழியர்களால் தரப்பட்ட காசோலை ஆகியவற்றை ஜனவரி 31 அன்று திரும்பத் தருவதாகவும் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

கோவை: ஒரே மெயிலில் 3,000 பேர் வேலையைப் பறித்த அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?

அதன் பிறகு நடந்ததை பிபிசி தமிழிடம் விளக்கிய இந்த நிறுவனத்தின் ஊழியர் தினேஷ், ''பேச்சுவார்த்தை நடந்த மறுநாளே ஊதியம் போடப்பட்டது. ஆனால் முழு ஊதியம் தரப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் 7 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி மீண்டும் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளோம்'' என்றார்.

வழக்கமாக இறுதி மாத சம்பளத்தின் அடிப்படையில்தான், பணிக்கொடை கணக்கிடப்படும் என்பதால், இறுதி மாதத்தின் ஊதியத்தைக் குறைத்துக் கொடுத்திருப்பதாக ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

வேலையிழந்த ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக மட்டுமே, நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணிக்கொடையையும் குறைப்பது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கடுமையாக பாதிக்குமென்று ஊழியர்கள் கூறுகின்றனர்.

பணியிழந்த ஊழியர்களுக்காகப் போராடி வரும் இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகியான தினேஷ், ''அங்கு பணியாற்றி வந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களில், 1100க்கும் மேற்பட்டோர், 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, பணிக்கொடை பெறும் தகுதியில் உள்ளனர். ஏற்கெனவே பாதிப் பேருக்கு ஊதியம் வரவில்லை. வந்த ஊதியமும் பாதியாக வந்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் இது பற்றி மீண்டும் பேசத் திட்டமிட்டுள்ளோம். ஆர்.எஸ்.புரம் மற்றும் பந்தயச்சாலை காவல் நிலையங்களில் புகாரும் கொடுத்துள்ளோம்'' என்றார்.

நிர்வாகம் தரப்பில் கூறுவது என்ன?

கோவை: ஒரே மெயிலில் 3,000 பேர் வேலையைப் பறித்த அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?

தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில், 'ஃபோகஸ் எஜூமேட்டிக்ஸ்' நிர்வாகத்துடன் நிரஞ்சன் குமார் என்பவர் மூலமாகவே தொடர்பு கொள்ளப்படுகிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவர், தனக்கே கடந்த மாத ஊதியம் தரப்படவில்லை என்றார். கோவையில் வசிப்பதால் இங்குள்ள ஊழியர்களுக்கு ஆதரவாக நான் நடந்து கொள்வதாகக் கருதி, கடந்த 2 நாட்களாகத் தன்னுடைய தொடர்பையும் நிர்வாகம் துண்டித்துவிட்டதாகத் தெரிவித்தார்.

''நான் இந்த நிறுவனத்தில் உதவி துணைத் தலைவராக (Tutoring Operation) இருக்கிறேன். என்னுடைய வேலை, பாடங்களை நிர்ணயிப்பதும் வகுப்பு எடுப்பதற்கான தகவல்களைத் திரட்டுவதும் தான். அத்துடன் வாடிக்கையாளர்களின் அனுபவங்களைப் பெற்று, அதற்கேற்ப மாற்றங்கள் செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் நிறுவனத்துக்காகப் பணியாற்றுபவர்களிடம் தகவல் பெற்று, அதற்கேற்ப டியூட்டர்களை தயார் செய்யும் பணியைச் செய்து வந்தேன். நிர்வாகத்தில் தலையிட எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனக்கே இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை'' என்றார் நிரஞ்சன்.

ஊழியர்களுக்கு பணிக்கொடையைக் குறைப்பதற்காக இறுதி மாத ஊதியத்தைக் குறைத்துத் தந்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். கடந்த மாதத்தில் 24 நாட்கள் மட்டும்தான் பணியில் இருந்ததால், அந்த நாட்களுக்கான ஊதியம் மட்டுமே தரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், அதற்குத்தான் நிர்வாகமும் ஒப்புக் கொண்டது என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார். தற்போது நிர்வாகம் தரப்பில், பெங்களூருவில் உள்ள நிறுவன இயக்குநர் ஜேசன்தான் பேசி வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.

டிரம்ப் அதிபரானது காரணமா?

கோவை: ஒரே மெயிலில் 3,000 பேர் வேலையைப் பறித்த அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?

இந்த நிறுவனம் லாபத்தில் தான் இயங்கி வந்ததாகவும், 2022ஆம் ஆண்டில் ஆல்பின் இன்வெஸ்ட்டர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனம், இதில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்த பின்பே லே ஆஃப், ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு போன்றவை நடந்திருப்பதாகவும் கூறுகிறார் இதில் பயிற்சியாளராகப் பணியாற்றிய தினேஷ்.

''லாபத்தை மட்டுமே பார்க்கும் முதலீட்டு நிறுவனம், இந்த நிறுவனத்தில் செலவு அதிகமிருப்பதாகக் கருதியுள்ளது. இந்த நிறுவனம் முதலீடு செய்யத் தயாராகயில்லை என்று தெரிந்ததுமே, வேறு முதலீட்டு நிறுவனத்தை நிர்வாகம் பிடித்திருக்க வேண்டும். இப்போது நிறுவனம் மூடப்பட்டிருப்பதற்கு தலைமை நிர்வாகிகளின் தவறுதலான அணுகுமுறை தான் காரணம். தற்போதுள்ள நிலையில் நிர்வாகம் தரப்பில் யாரிடம் இதுபற்றிப் பேசுவதென்றே தெரியவில்லை'' என்றார் நிரஞ்சன்.

அமெரிக்காவில் கல்வி சார்ந்த பயிற்சிகள் மற்றும் விளக்கங்களைப் பெறுவதற்கு ஏராளமான மாணவர்கள் பதிவு செய்து காத்திருப்பதாகத் தெரிவித்த நிரஞ்சன், அங்கே இருக்கும் தேவைக்கு ஏற்ப, இந்தியாவில் மனித வளம் இருப்பதாகக் கூறுகிறார். இந்த நிறுவனத்தை மீட்க முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் இந்த ஊழியர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, அங்கு எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படியே, இந்த நிறுவனத்துக்கான முதலீடு கிடைக்காமல் மூடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் இந்தக் கருத்தை நிர்வாகம் தரப்பில் பேசியவர்களும், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் நிர்வாகிகளும் மறுக்கின்றனர்.

தகவல் தொழில்நுட்பத்துறை மேலாண்மை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர், ''அமெரிக்காவில் இருக்கும் முதலீட்டு நிறுவனங்கள், ஓர் இலக்கை வைத்து அந்த லாபத்தை நோக்கிப் பயணிக்கின்றன," என்றார்.

மேலும் அவர், "இந்த நிறுவனத்தில் செய்த முதலீட்டுக்கு ஏற்ற லாபம் இல்லாமல் அந்த நிறுவனம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அங்கே முதலீடு செய்வதற்கு ஏராளமான தொழில்கள் இருக்கின்றன. அந்தத் தொழில்களை மேம்படுத்த முதலீட்டுக்கான தேவையும் அதிகமிருக்கிறது.

அதனால் இந்த நிறுவனத்திற்கான முதலீடு மறுக்கப்பட்டிருக்கலாம். இதற்கும் அமெரிக்காவில் புதிய அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க வாய்ப்பேயில்லை,'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)