காணொளி: வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
வெப்ப அலைகள் உடல்நலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெப்பத்திலிருந்து தப்பிக்க சிலர் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தகைய சூழலில் வீட்டின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் மிகவும் அவசியம்.
இரவு நேரத்தில் வீசும் காற்றைக் கொண்டு உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பரிந்துரைப்படி, இருட்டிய பிறகு ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். அதேபோல, பகல் நேரத்தில் சூரிய வெப்பம் வீட்டுக்குள் நுழையாமல் இருக்க கதவுகளை மூடி வைக்க வேண்டும்.
சுற்றுப்புற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருந்தால், மின்விசிறிகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். ஆனால், வெப்பநிலை 40 டிகிரியைத் தாண்டினால், மின்விசிறிகள் உடலை குளிர்ச்சியடையச் செய்வதற்குப் பதிலாக, சூட்டை அதிகரிக்கக்கூடும். இத்தகைய சூழலில் ஏர் கூலர் போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



