காணொளி: 'இரானுடனான ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை முடிந்தது' - டிரம்ப்
இரானுடனான ஒப்பந்த விவகாரத்தில் பெரும்பாலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது என்றும், அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இந்த ஒப்பந்தத்தில் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதும் அடங்கும் என டிரம்ப் கூறுகிறார். எனினும், அது தொடர்பான கூடுதல் விவரங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை.
முன்னதாக, அமெரிக்க மற்றும் இரானிய நிலைப்பாடுகள் ஒன்றிணைந்து வருவதாக இரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி நேற்று அரசு ஊடகத்திடம் கூறி இருந்தார். ஆனால், முக்கிய பிரச்னைகளில் ஒப்பந்தம் எட்டப்படும் என இதற்கு அர்த்தமில்லை என அவர் எச்சரித்ததோடு, அமெரிக்கா தரப்பு முரண்பட்ட கருத்துகளை கூறுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
ஏப்ரல் தொடக்கத்தில் போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதிலிருந்தே அமெரிக்காவும் இரானும் நீண்டகால அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், அமைதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் நல்ல உரையாடல் நடந்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒப்பந்தம் தொடர்பாக பெரும்பாலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது என்றும் ஒப்பந்தத்தின் இறுதி அம்சங்களும் விவரங்களும் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன, அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



